குரூப்- 4 தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதலாக 727 காலிப் பணியிடங்களை சேர்த்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் பல்வேறு துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 25-ம் தேதி தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 4922 மையங்களில் குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை 11 லட்சத்து 48 ஆயிரத்து 19 பேர் எழுதினர். இதனையடுத்து, குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் எனவும் தேர்வாணையம் அறிவித்தது.
இந்த நிலையில், ஜூலை மாதம் நடந்த குரூப்-4 தேர்வில் கூடுதலாக 727 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மொத்த காலிப்பணியிடங்கள் 4,662 ஆக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப் 4 பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 25.04.2025 அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், கூடுதலாக 727 காலிப்பணியிடங்களுக்கான பிற்சேர்க்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 4,662 ஆகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.