எம்.எஸ்.சுவாமிநாதன் குரலற்றவர்களின் குரலாக திகழ்ந்தார்- மு.க.ஸ்டாலின் புகழாரம்

எம்.எஸ்.சுவாமிநாதன் உணவு பாதுகாப்பின் காவலராகவும், குரலற்றவர்களின் குரலாகவும், எளிமையின் உருவமாகவும் திகழ்ந்தார் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ” தான் கற்ற அறிவியலை மக்கள் பசிபோக்க பயன்படுத்திய சிந்தனையாளர் எம்.எஸ்.சுவாமிநாதன். காலநிலை மாற்றம் குறித்து 50 ஆண்டுகளுக்கு முன்பே எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியிருக்கிறார்.  எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை இந்தியா என்றும் மறக்காது. இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை என உலகமே அழைத்தாலும் நமக்கு அவர் உணவு பாதுகாப்பின் காவலராகவும், குரலற்றவர்களின் குரலாகவும், எளிமையின் உருவமாகவும் இருந்தார்.

வேளாண்மைக்கான நவீன கருவிகளைக் குறைந்த விலையில் விவசாயிகளிடம் கொண்டுசேர்க்கும் பணி அவசியம். வேளாண் துறையில் நவீன கண்டுபிடிப்புகளுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் நிதி அறிவித்து ரூ.1 கோடி ஒதுக்கி உள்ளேன். மண்ணுயிர் காத்து பல்லுயிர் காக்கும் எங்களின் முயற்சிக்கு நீங்கள் துணை நிற்பீர்கள் என நம்புகிறேன். மத்திய அரசு 2070-ம் ஆண்டுக்குள் கார்பன் பயன்பாட்டை குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில் 2050-ம் ஆண்டுக்குள் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வேளாண் பல்கலைக்கழக. மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது வழங்குவதாக அறிவித்துள்ளோம். போரூரில் ஈரநிலை பசுமை பூங்காவிற்கு எம்.ஸ்.சுவாமிநாதனின் பெயரை பரிந்துரைத்துள்ளோம். வேளாண்மையையும், உழவர்களையும் எந்நாளும் பாதுகாப்போம் என உறுதி கூறுகிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *