மு.க.ஸ்டாலின் தொகுதியில் போலி வாக்காளர்கள்: எல்.முருகன் குற்றச்சாட்டு!

முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்துர் தொகுதியில் கூட போலி வாக்காளர்கள் இருப்பதாக பெரிய அளவில் குற்றச்சாட்டு இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” அனைத்து கட்சி கூட்டம் என்ற பெயரில் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகம் நடத்தியுள்ளார். அவர்கள் மீது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் வரும் போது, அவற்றை திசை திருப்ப பல்வேறு விஷயங்களை கையில் எடுப்பது அவர்களது வாடிக்கை. வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து இருக்கிறார்கள். வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் அவசியமே, இரட்டை வாக்காளர்கள், இறந்து போன வாக்காளர்கள், போலியான வாக்காளர்களை களைவது தான்.

பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் அவசியமாக இருந்தது. கிட்டத்தட்ட 6 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருக்கின்றனர். முறையான வாக்காளர்கள் பட்டியல் இருக்க வேண்டும். தமிழகத்தில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ள உள்ளனர். இது வரவேற்கதக்க ஒன்று. வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்பது காலத்தின் கட்டாயம்; அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் கூட போலி வாக்காளர்கள் இருப்பதாக பெரிய அளவில் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. நியாயமான வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் மூலம், உண்மையான வாக்காளர்களை கொண்டு வருவது தான் நோக்கமாக இருக்கிறது. முறையான தேர்தல் நடத்த வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க வேண்டும். அப்போது தான் ஜனநாயக நாட்டில் சரியான வாக்களிப்பு இருக்கும். உச்சநீதிமன்றம் தெரிவித்ததன் அடிப்படையில்தான் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *