மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்- ஆத்திரமான அண்ணாமலை!

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,” கோவை சர்வதேச விமான நிலையம் அருகில், நேற்று இரவு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி, மூன்று சமூக விரோதிகளால் கூட்டுப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் பயமில்லை என்பதையே, பெண்களுக்கெதிரான இது போன்ற தொடர் குற்றச்செயல்கள் காட்டுகின்றன. திமுக அமைச்சர்கள் முதல், காவல்துறையினர் வரை பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கையே மேற்கொள்கின்றனர். பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ, காவல்துறையினரைப் பயன்படுத்தாமல், திமுக அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம் இன்று இழிநிலையில் இருக்கிறது. இப்படி ஒரு கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெட்கித் தலைகுனிய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *