விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே இளைஞர் ஒருவர் “வாட்ஸ் அப், டெலிகிராம்” போன்ற செயலிகளில் வந்த பகுதிநேர வேலைகளை நம்பி லட்சக் கணக்கில் பணத்தை இழந்து பரிதாபமாக நிற்கிறார்.
சிக்கியது எப்படி?
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த கந்தாடு கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன். இவருக்கு வயது 28. இவரது செல்போன் நம்பருக்கு கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி அடையாளம் தெரியாத நபர்கள், இவரின் வாட்ஸ்அப் செயலுக்கும், டெலிகிராமிற்கும், ‘பகுதி நேர வேலைகள் உள்ளது. அதனை செய்கிறீர்களா?’ என்று கேட்டுள்ளனர். கூடுதல் வருமானத்திற்கு ஆசைப்பட்ட தமிழரசன், அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு, பகுதிநேர வேலைக்கான லிங்க்கு-களை வாட்ஸ் அப், டெலிகிராம் மூலமாக அந்த மோசடி கும்பல் அனுப்பி இருக்கிறார்கள். இது எல்லாம் நம்பிய தமிழரசன் மும்முரமாக அவர்கள் சொல்லும் டாஸ்க்களை ஒவ்வொன்றாக செய்து வந்துள்ளார். அதற்கு ஆயிரக்கணக்கில் பணமும் செலுத்தியுள்ளார். அதாவது, அந்த மோசடி கும்பல் சொல்லும் ‘டாஸ்க்’ஐ முடித்தால் குறிப்பிட்ட தொகை தருவார்களாம்!
இதை நம்பிய தமிழரசன், 20,999 ரூபாய் செலுத்தி 40,493 ரூபாயும், 30,000 ரூபாய் செலுத்தி 41,494 ரூபாய் திரும்ப பெற்றுள்ளார்.
ஆயிரக்கணக்கில் லாபத்துடன் பணம் திரும்பி வரும் என்று தமிழரசனுக்கு பேராசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த, ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மொத்தம் 8 லட்சத்து 50 ஆயிரத்து 56 ரூபாயை.., 3 தவணைகளில் அடையாளம் தெரியாத நபர்களின் வங்கி கணக்கிற்கு தமிழரசன் அனுப்பியுள்ளார்.
பின், டாஸ்க் முடித்த பிறகு பணத்தை திருப்பிக்கொடுக்காமல் அந்த மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட தமிழரசன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சைபர் கிரைம் சொல்வது என்ன?
தற்போது ஆன்லைனில், மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் கூட “பகுதிநேரமாக ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம், வீட்டில் இருந்தபடியே நன்கு சம்பாதிக்கும் வாய்ப்பு..!” போன்ற மோசடி விளம்பரங்கள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக, வேலைத் தேடும் இளைஞர்களை குறிவைத்தும், கூடுதல் வருமானத்திற்காக காத்திருக்கும் ஆண்களை குறிவைத்தும் விதவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. நாம் மிகவும் விழிப்புணர்வு உடன் இருக்க வேண்டுமென சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.