பொள்ளாச்சியில் மனநல காப்பகத்தில் இருந்த மனநலம் குன்றியவர், கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் மனநல காப்பகங்கள் மீதான ஆய்வு தொடங்கியுள்ளது. அனைத்து மனநல காப்பகங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில், ‘யுதிரா சேரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற பெயரில், மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது.
ஆட்டிசம், டிஸ்லெக்சியா, டவுன்சிண்ட்ரோம் உள்ளிட்ட 5 வகையான மனநல பாதிப்பு உள்ளவர்களுக்கான காப்பகம் மற்றும் பயிற்சி மையம் என்ற பெயரில் இதற்கு இணையத்திலும் ஏராளமான புகைப்படங்களுடன் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இணைய விளம்பரத்தில் ஈர்க்கும் மனநல காப்பகம்
நட்சத்திர விடுதிகளுக்கு இணையான வசதிகளுடன் கூடிய கட்டடம், உள்விளையாட்டு அரங்கம், சிறப்புப் பயிற்சி மையங்கள், திறந்தவெளி மைதானங்கள், அதிநவீன பயிற்சி வகுப்பறைகள் என இந்தக் காப்பகத்தின் விளம்பரமே எல்லோரையும் ஈர்ப்பதாக உள்ளது.
இதை மனநல ஆலோசகரான டாக்டர் கவிதா, அவருடைய கணவர் லட்சுமணன், மகள்கள் சுருதி, ஸ்ரேயா, ஷாஜி ஆகியோர் அறக்கட்டளை நிர்வாகிகளாக இருந்து நடத்தி வந்துள்ளனர். இங்கு மனநல பயிற்சியளிக்கும் பயிற்றுநர்கள், உடல் திறன் தேர்வுக்கான பயிற்சியாளர்கள், காப்பாளர்கள், பராமரிப்பாளர்கள் எனப் பலர் பணியாற்றி வந்தனர்.
இந்தக் காப்பகத்தில், கோவை மாவட்டம் சோமனுார் அருகேயுள்ள கரவளி மாதப்பூரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகன் வருண் காந்த் (வயது 24) உள்பட 25க்கும் மேற்பட்டோர் மனநல சிகிச்சைக்காகத் தங்கியிருந்தனர்.
கடந்த மே 13 ஆம் தேதியன்று, அவர்களை ஆழியாறு அணைக்கு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றபோது, வருண் காந்த் காணாமல் போய்விட்டதாக, ரவிக்குமாருக்கு காப்பகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி ஆழியாறு காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு ரவிக்குமாரும், அவரது மனைவியும் காப்பகத்திற்குச் சென்று பார்த்துள்ளனர்.
அப்போது அங்கிருந்த சிலர் அளித்த தகவலின்பேரில், மே 13ஆம் தேதி ஆழியாறுக்கு அழைத்துச் சென்றபோது, காப்பகத்தில் இருந்து தங்கள் மகன் வருண் காந்த் வாகனத்தில் ஏறுகின்ற காட்சி, காப்பகத்திலுள்ள சிசிடிவியில் இருக்கிறதா என்று ரவிக்குமார் ஆய்வு செய்துள்ளார். அப்போது, அவர் அங்கிருந்து ஏறவில்லை என்பதும், அதற்கு முதல் நாளிலேயே வருண் காந்த்தை காப்பக ஊழியர்கள் தாக்கியதும் தெரிய வந்துள்ளது.
அதுகுறித்த விவரங்களை வழங்கிய மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் “கடந்த மே 12ஆம் தேதியன்று, வருண் காந்தை காப்பக ஊழியர்கள் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அதில் அவர் உயிரிழந்துள்ளார். ஆனால் அதை வருணின் பெற்றோர் மற்றும் காவல்துறையிடம் தெரிவிக்காமல், மறைக்க முயன்று, டாக்டர் கவிதாவுக்கு சொந்தமான நடுப்புணி பி.நாகூர் பகுதியிலுள்ள தோட்டத்தில் குழி தோண்டி வருண் காந்தின் உடலைப் புதைத்துள்ளனர்.
அதன் பிறகு மே 13ஆம் தேதியன்று, ஆழியாறுக்கு காப்பகத்தில் உள்ளவர்கள் எல்லோரையும் சுற்றுலா அழைத்துச் செல்வது போல அழைத்துச் சென்று, அங்கே வைத்து வருண் காணாமல் போய்விட்டதாகப் புகார் கொடுக்கவும் திட்டமிட்டு, அதையே செய்துள்ளனர்,” என்று தெரிவித்தனர்.