மதுரை மீனாட்சி பஜாரில் செல்போன் கடையில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்து கடைகளில் பரவி லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான செல்போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
மதுரை பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகில் மீனாட்சி பஜார் பல ஆண்டுகாலமாக இயங்கி வருகிறது. இந்த இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செல்போன் கடைகள், எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் என ஏகப்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் தான் தீக்கு இரையாகி உள்ளது.
எப்படி தீ விபத்து..?
மீனாட்சி பஜாரில் உள்ள ஒரு செல்போன் கடையில் ஆயுத பூஜையை முன்னிட்டு விளக்கு ஏற்றி கொண்டாடப்பட்டது. உரிமையாளர் அந்த கடையில் தீபம் ஏற்றி வைத்த விளக்கை அணைக்காமல் கடையை அப்படியே இழுத்துப் பூட்டிவிட்டு சென்றுவிட்டார். அந்த தீபம் தான் பெரும் பிரச்சினையாக மாறி உள்ளது.
லட்சம் ரூபாய் போச்சு..!
அந்த விளக்கில் உள்ள தீயால் அந்த செல்போன் கடை தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. கடையில் உள்ள லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான செல்போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் எல்லாம் தீக்கு இரையாகின. அது மட்டுமில்லாமல் தீ மல,மலவென அருகில் உள்ள செல்போன் கடைகளுக்கும் பரவத் தொடங்கியது.
காவல்துறை விசாரணை:-
மீனாட்சி பஜாரில் உள்ள பல கடைகளும் தீயில் கருகி சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு சென்று, தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
