தவெக தலைவர் விஜய் மீது எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், கரூர் விவகாரத்தில் அவருக்கு துணையாக நிற்பேன் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார்.
கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். தமிழகத்தை அதிர வைத்த அந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற போது, கரூரில் இருந்து அவசர அவசரமாக தனி விமானம் மூலம் சென்னை சென்ற தவெக தலைவர் விஜய், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் சொல்லவில்லை. மூன்று நாட்கள் கழித்து வீடியோ மூலம் சில கருத்துகளை வெளியிட்டார். இதற்கு பல்வேறு கட்சியினர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா, தவெக தலைவர் விஜய்க்கு ஆதராக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவெக தலைவர் விஜய் மீது எனக்கு கருத்து வேறுபாடுகள் உள்ளது. ஆனால், கரூர் விவகாரத்தில் அவருக்கு துணையாக நிற்பேன். அவர் அப்படி என்ன தவறு செய்தார்? அவர் நான்கு மணி நேரம் பிரச்சாரக் கூட்டத்திற்கு தாமதமாக வந்தது ஒரு குற்றமா? எம்.ஜி.ஆர் 36 மணி நேரம் தாமதமாக வந்தாலும் மக்கள் காத்திருந்து பார்ப்பதை நேரில் பார்த்தவன் நான். அது ஒரு குற்றம் என்று சொல்ல முடியுமா? வரும் வழியில் கூட்டம் இருந்திருக்கலாம். அதனால் கூட தாமதம் ஆகியிருக்கலாம்” என்று தெரிவித்தார்.
