கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நேரில் ஆய்வு செய்தார்.
கரூரில் செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சம்பவம் நடைபெற்ற அன்று இரவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் உள்பட பல்வேறு கட்சித்தலைவர்கள் பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த நிலையில், மத்திய அரசால் அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் 8 பேர் அடங்கியகுழு கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியது. அத்துடன் அக்குழுவின் உறுப்பினரான அனுராக் தாக்கூர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், கரூர் வேலுசாமிபுரத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா இன்று நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை நேரில் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். அத்துடன் கரூரில் செப்.27-ம் தேதி நடைபெற்ற அசாம்பவிதம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவரை சந்தித்து நலம் விசாரித்தார்.
