அதிமுகவில் இணைய நான் எந்த டிமாண்டும் வைக்கவில்லை- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

அதிமுகவில் இணைய நான் எந்த வித டிமாண்டும் வைக்கவில்லை என்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் எந்த ரூபத்தில் எப்படி வந்தாலும் நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். அதற்கு முழு ஒத்துழைப்பும் தருவேன். ஒன்றிணைந்தால் தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது நடக்கும். ஏனெனில், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்கிற எண்ணம் அனைவரின் மனதிலும் உள்ளது.

எடப்பாடி பழனிசாமியை தவிர முதல்வர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும் கூட்டணிக்குள் வருவேன் என்று டி.டி.வி.தினகரன் கூறியது ஆழமான கருத்து. சத்தான கருத்து. என்னைப் பொறுத்தவரை கட்சி இணைவது குறித்து நான் எந்த வித டிமாண்டும் வைக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவீர்களா என்று கேட்கிறீர்கள். அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பரும் இல்லை எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

அதிமுகவில் ஒன்றிணைய எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டால், அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு, அதில் பேச வேண்டிய பல பிரச்னைகள் உள்ளன. ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எங்கள் தர்ம யுத்தத்தின் அடிப்படையில் அந்த வழக்குகள் உள்ளன. அது நிறைவேறும் பட்சத்தில் நாங்கள் யோசனை செய்வோம் என்ற ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் எடுத்திருக்கும் முயற்சி உறுதியாக வெற்றி பெறும். அதற்கு எனது வாழ்த்துகள். டெல்லியில் இருந்து எந்த அழைப்பும் இதுவரை எனக்கு வரவில்லை. செங்கோட்டையனிடம் தினமும் தொலைபேசியில் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *