மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழைபெய்து வருகிறது. சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. கனமழை மேலும் நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் அவர், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையை எதிர்கொள்வது குறித்து, இன்றும் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினேன். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நெல் கொள்முதல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ளவும் உத்தரவிட்டு, எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்தேன். மக்கள் பிரதிநிதிகளும், ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தென்காசி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க அக்டோபர் 24, 25 ஆகிய தேதிகளில் தென்காசிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல இருந்தார். ஆனால், சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
