வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்டாளி மக்கள் நிறுவனர் ராமதாஸ்க்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சி இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் வடுகம்பட்டி பகுதியில் கட்சியின் நிர்வாகி வீட்டின் துக்க நிகழ்வில் கலந்து கொள்ள சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்றனர்.
இதன் பின் அங்கிருந்து அருள் எம்எல்ஏவும், அவரது ஆதரவாளர்களும் சேலம் நோக்கி பத்துக்கும் மேற்பட்ட கார்களில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அன்புமணி ஆதரவாளர்கள் அருள் வந்த காரை வழிமறித்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அருள் எம்எல்ஏ கார் மீது அன்புமணி ஆதரவாளர்கள் திடீரென கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு அருள் எம்எல்ஏ ஆதரவாளர்களும் கல்வீசி பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் கல் வீசியதோடு, கட்டைகளைக் கொண்டு தாக்கிக் கொண்டதால் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பாமக எம்எல்ஏ அருள் கூறுகையில், ”துக்க வீட்டில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது சோளக்காட்டிற்குள் மறைந்திருந்தவர்கள் காரை நிறுத்தி எங்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தினர். என்னைக் கொலை செய்யும் நோக்கில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தியதில் 6 கார்கள் சேதமடைந்தன. அன்புமணியின் ஆதரவாளர்களே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.” என்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
