எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு…நவம்பர் 11-ம் தேதி விசாரணை!

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த (எஸ்ஐஆர்) பணிகளுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு நவம்பர் 11-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.

வாக்காளர் தீவிர திருத்தப் பணிகளை (எஸ்ஐஆர்) தமிழ்நாட்டில் மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது,’ என திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘பிஹார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் தீவிர திருத்த பணிகளில் நிறைய குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. அது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்கில், இன்னமும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், அவசர அவசரமாக தமிழ்நாட்டில் இந்த திருத்தப் பணிகளை, தேர்தல் ஆணையம் மேற்கொள்வது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த சூழலில், அவசரமாக இந்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருவது நியாயமான நடைமுறை அல்ல. இந்த பணிகள் மேற்கொள்ளும் காலக்கட்டத்தில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. இதனால், பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும். தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்கள் முறையாக சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்படலாம். இதனால், பலரும் தங்களுடைய ஓட்டுரிமையை இழக்கக்கூடிய அபாயம் உள்ளது.

மேலும், அரசிலமைப்புச் சட்டம் தந்த அதிகாரங்களை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுவதாவும், தகுதி உள்ளவர்கள் நீக்கப்படுவதற்கும், தகுதியற்றோர் சேர்க்கப்படுவதற்கும் ஏதுவான வகையில் இந்த நடைமுறை அமைந்துள்ளதாகவும், இந்த எஸ்ஐஆரை நடைமுறைபடுத்தினால், லட்சக்கணக்கான தமிழ்நாடு வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை இழக்கும் அபாயம் ஏற்படும் போன்ற முக்கிய காரணங்களை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணிகளுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நவம்பர் 11-ம் தேதி இவ்வழக்கு விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *