கோவையில் அடுத்த ஷாக்: இளம்பெண் காரில் கடத்தல்… கமிஷனர் என்ன சொல்கிறார்?

கோவை இருகூர் அருகே இளம்பெண் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூரில் உள்ள இருகூர் பகுதியில் அத்தப்பகவுண்டன்புதூரில் தீபம் நகர் உள்ளது. நேற்று இரவு இவ்ழியாக வந்த இளம்பெண்ணை அங்கு நின்ற ஒரு காரில் ஒரு கும்பல் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுள்ளது. அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது வெள்ளை நிற கார் நின்று கொண்டிருப்பதும், பெண் ஒருவர் சத்தம் போடுவதும் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில் கோவை மாநகர போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ சிங்காநல்லூர் அருகே இருகூர் பகுதியில் நேற்று இரவு காரில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதாக அந்த வழியாக நடந்து சென்ற ஒரு பெண் மூலம் தகவல் அறிந்து ஓய்வு பெற்ற சிறப்பு எஸ்.ஐ கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் சிங்காநல்லூர் காவல் துறையினர் சூலூர் முதல் ஏ.ஜி புதூர் வரை உள்ள பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஏ.ஜி புதூரில் ஒரு பேக்கரி கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் குறிப்பிட்ட அந்த வெள்ளை நிற கார் பதிவாகி இருந்தது. ஆனால், அந்த காரின் பதிவு எண் கண்காணிப்பு கேமராவில் சரியாக பதிவாகவில்லை. இருப்பினும் நவீன உதவியுடன் அந்த காரின் பதிவு எண்ணை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் இதுவரை பெண் கடத்தல் சம்பவம் தொடர்பாக எந்த புகாரும் போலீஸாருக்கு வரவில்லை.” என்றார்.

கோவையில் கல்லூரி படிக்கும் மாணவியை மூன்று பேர் கடத்திச் சென்று கூட்டுப் பலாத்காரம் செய்து சாலையில் வீசி விட்டுச் சென்ற சம்பவம் மறையும் முன், இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *