அதிர்ச்சி… மத்திய அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மீது திடீர் தாக்குதல்!

மத்திய அமைச்சர் சுகந்தா மஜூம்தரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான சுகந்தா மஜூம்தர் மத்திய கல்வித்துறை இணை அமைச்சராக உள்ளார். இவர் கொல்கத்தாவில் உள்ள நடியா மாவட்டத்தின் பல்வேறு மாவட்ட நிகழ்ச்சிகளில் சுகந்தா மஜூம்தர் பங்கேற்று விட்டு காரில் சென்று கொண்டிருந்தார். நபாத்விப் பகுதி அருகே திரிணமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டிருந்தது. அப்போது, அந்த வழியாக மத்திய அமைச்சர் சுகந்தா மஜூம்தரின் கார் சென்றது. அப்போது அவரது பாதுகாப்பு வாகனத்தை தடுத்து திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கார் பலத்த சேதடைந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மத்திய அமைச்சர் சுகந்தா மஜூம்தர் கூறுகையில், ‘குடிபோதையில் இருந்த திரிணமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் மற்றும் தொண்டர்கள் எனது பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆளும் கட்சி ஆதரவு பெற்ற குண்டர்களால் பல பாஜக தொண்டர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். இதில், பலர் காயமடைந்துள்ளனர் ‘ என்றார். ஆனால், இந்த குற்றச்சாட்டை திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் மறுத்துள்ளனர்.

இதுகுறித்து நபாத்விப் நகராட்சி தலைவர் பிமான் சாஹா கூறுகையில்,” பாஜக ஆதரவாளர்கள், திரிணமுல் காங்கிரஸின் தொழிற்சங்க அமைப்பான ஐஎன்டிடியுசி அலுவலகத்தை தாக்கியதால் பதற்றம் உண்டானது. இதனைக் கண்டித்து பேருந்து நிலையம் அருகே எங்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திய போது பாஜகவினரால் மீண்டும் தாக்கப்பட்டனர். இதனால், இருதரப்பினரிடையே கைகலப்பு உருவானது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *