கோவை மாணவி பலாத்கார வழக்கு- குற்றவாளிகளுக்கு 14-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் சுட்டு பிடிக்கப்பட்ட மூன்று பேரையும் வரும் 19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோவை விமான நிலையத்தின் பின்புறம், நவம்பவர் 2- ம் தேதி இரவு, தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கல்லுாரி மாணவி, மூன்று நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஸ்(30), அவரது சகோதரர் கார்த்திக்(21), மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த குணா(20), என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரும் நவம்பர் 3-ம் தேதி இரவு, துடியலுார் வெள்ளக்கிணறு பட்டத்தரசி அம்மன் கோயில் அருகே பதுங்கி இருந்தபோது, போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

இதில் கால்களில் குண்டு பாய்ந்த மூவரும் கைது செய்யப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவியும் இதே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற ஜே.எம் 2 நீதிபதி அப்துல் ரகுமான் மருத்துவமனைக்கு நேரில் சென்று நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் நவம்பர் 19-ம் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பொதுப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள சிறை பிரிவிற்கு மாற்றப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *