பிஹார் சட்டமன்ற தேர்தலில் பிரபல தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கவில்லை. இதனால் அக்கட்சியினர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பிஹார் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. அதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலையில் இருந்து நடைபெற்று வருகிறது.பிஹாரில் உள்ள 243 தொகுதிகளில் சுமார் 191 தொகுதிகளில் பாஜக- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. துவக்கத்தில் 76 இடங்களில் முன்னிலை பெற்ற தேஜஸ்வியின் ஆர்ஜேடி தலைமையிலான மகாபந்தன் கூட்டணி பின்னடைவு சந்தித்துள்ளது. தற்போது அந்த கூட்டணி 48 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.
பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி, மகாபந்தன் கூட்டணியை போல பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி முக்கிய வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் பிரசாந்த் கிஷோர் சென்ற இடங்களில் பெரும் கூட்டம் கூடியது. 3 ஆயிரம் கி.மீ பேரணி மேற்கொண்ட பிரசாந்த் கிஷோருக்கு பெரும் வரவேற்பும் கிடைத்தது. இதனால் 238 தொகுதிகளில் ஜன் சுராஜ் கட்சி தனித்து போட்டியிட்டது. ஆனால், இந்த கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. இதனால் அக்கட்சியின் தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் ஜன் சுராஜ் கட்சிக்கு 2 முதல் 4 தொகுதிகள் கிடைக்கும என்று கணிக்கப்பட்டது. ஆனால், கணிப்பும் தற்போது ஏமாற்றமளித்துள்ளது.
பிஹார் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால், அரசியலை விட்டு விலகுவேன் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுயிருந்தார். தற்போது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 75 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன் காரணத்தால் நிதிஷ்குமார் அரசியலை விட்டு விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
