டெல்லியில் காற்சு மாடுபாடு அதிகரித்துள்ள நிலையில் குறிப்பிட்ட சில வாகனங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி இயக்கினால் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு தீபாவளிக்கு பின் மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் காற்று மாசை குறைக்க செயற்கை மழை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால்,, அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது. தற்போது அதைப் பற்றிய மறுபரிசீலனையும் ஆய்வும் நடந்து வருகிறது.
இந்த நிலையில், டெல்லி முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக காற்று தரக் குறியீடு மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் சுவாசக்கோளாறால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பஞ்சாப், ஹரியாணானா போன்ற இடங்களில் விவசாயிகள் பயிர் கழிவுகளை எரிப்பது தான் டெல்லி காற்று மாசுக்கு முக்கிய காரணம் என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகிறது. இந்த பிரச்னையைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் குறித்து உச்சநீதிமன்றம் முன்பே விளக்கம் கோரியுள்ளது. இந்த விவகாரம் மீதான விசாரணை நவம்பர் 17-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், டெல்லி அரசு சில வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு தற்காலிகத் தடைவித்து உள்ளது. அதன்படி பிஎஸ்3 (BS3) பெட்ரோல் வாகனங்கள், பிஎஸ் 4 (BS4) டீசல் வாகனங்களைப் பயன்படுத்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிஎஸ்6 ( BS6) வாகனங்களை விட அதிக மாசு உமிழ்வதால், முதலில் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. டெல்லி, நொய்டா, குர்கான், காசியாபாத், ஃபரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது.
ஆனால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி போன்ற அவசர சேவை வாகனங்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்கள், சிஎன்ஜி பேருந்துகள், டீசல் அல்லாத சரக்கு வாகனங்களுக்கு விலக்களிக்கப்ட்டுள்ளன. இந்த நிலையில், கட்டுப்பாடுகளை மீறி தடைசெய்யப்பட்ட வாகனங்களை ஓட்டினால் ரூ.20,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
