பிஹார் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் என்ற பெயரில் திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மீது பாஜக குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
பிஹார் சட்டமன்றத் தேர்தல் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக 89 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 85, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) 19, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 4, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 5 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
இதற்கு எதிராக போட்டியிட மகாபந்தன் என்ற இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 25, காங்கிரஸ் 6, இந்திய கம்யூனிஸ்ட்( எம்எல்) 2, மார்க்சிஸ்ட் 1, ஐஐபி 1 தொகுதியில் வெற்றி பெற்றன. இந்த கூட்டணிக்கு 35 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது மெகா கூட்டணி 75 இடங்களை இழந்துள்ளது.
இந்த நிலையில் பிஹார் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் என்ற பெயரில் திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மீது பாஜக தாக்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அத்துடன் பல இடங்களில் அலுவலகங்கள் தீ வைக்கப்பட்டதுடன், அதில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன. குறிப்பாக கமல்பூரில் உள்ள மாணிக் பந்தரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்கியதுடன் பாஜகவினர் தீ வைத்தனர்.
கடந்த 2018-ம் ஆண்டு முதல் இந்த அலுவலகத்தை பாஜக தாக்குவது 9வது முறையாகும். மேலும் நெசவாளர் கடை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு திரிபுரா எதிர்க்கட்சி தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான ஜிதேந்திர சவுத்ரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் வன்முறை அரசியலுக்கு எதிராக திரிபுரா மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
