கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் சிபிஐ விசாரணைக்கு தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்டோர் ஆஜராகியுள்ளனர்.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில், நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 41 பேர் பலியாகினர். மேலும் 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்ஸுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், மின்வாரிய ஊழியர்கள் என பலரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் என்ற புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் சிபிஐ காவல்துறையினர் இன்று விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டு, அவர்களை ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர்.
சிபிஐ அதிகாரிகள் தங்கி இருக்கும் பொதுப்பணித்துறையின் சுற்றுலா மாளிகைக்கு விசாரணைக்காக தவெக நிர்வாகிகள் இன்று நேரில் வந்தனர். ஏற்கெனவே சென்னை பனையூர் அலுவலகத்தில் சிபிஐ காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது நிர்வாகிகளை கரூர் வரவழைத்து நேரில் விசாரணை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
