16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த மலேசிய அரசு தடைவிதித்துள்ளது.
உலகம் முழுவதும் குழந்தைகளை சமூக ஊடகங்களின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பல்வேறு நாடுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வடக்கு ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களால் குழந்தைகளும், இளைஞர்களும், துாக்கம், அமைதி, அறிவை இழந்து ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாவது கண்டறியப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல் தொழில் நுட்ப அமைச்சர் கரோலின் ஸ்டேஜ் கூறியிருந்தார்
.
இதனிடையே 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ, பயன்படுத்தவோ ஆஸ்திரேலியா அரசும் தடை விதித்துள்ளது. இது வரும் டிசம்பர் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க மலேசிய அரசு முடிவு செய்துள்ளது. நிதி மோசடிகள், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற ஆன்லைன் அபாயங்களில் இருந்து சிறுவர்களை பாதுகாக்கும் வகையில் வழிமுறைகளை வகுத்து வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. ஏற்கெனவே 15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு நார்வே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
