தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் படிவங்கள் திரும்ப பெற டிசம்பர் 4-ம் தேதி வரை தான் கால அவகாசம் என்றும், காலக்கெடு மேலும் நீடிக்கப்படாது எனவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (நவம்பர் 24) ஆலோசனை மேற்கொண்டார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,” தமிழ்நாட்டில் எஸ்ஐஆர். பணிகளுக்கு கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணிகள் டிசம்பர் 4-ம் தேதி வரை தொடரும். அனைவரும் கண்டிப்பாக படிவத்தை நிரப்பித் தர வேண்டும். முடிந்தவரை தகவல்களை நிரப்பி கொடுக்க வேண்டும். இதுவரை 6.16 கோடி வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. 50 சதவீத படிவங்கள் நிரப்பிய நிலையில் திருப்பி பெறப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இந்த பணிகளில் 83,256 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் 68 ஆயிரம் பேர் பிஎல்ஓக்கள். மேலும் 33 ஆயிரம் தன்னார்வலர்கள், 2,45,340 கட்சி ஏஜெண்டுகள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் எஸ்ஐஆர் பணிகளில் அதிகம் பேர் ஈடுபட்டுள்ளனர். தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும். வரைவு பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்க உரிய அவகாசம் சேர்க்கப்படும். பிற மாநிலங்களைச் சேர்ந்த 800 பேர் தமிழக வாக்காளர் பட்டியிலில் விண்ணப்பித்துள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு விடுபட்டவர்கள் கண்டிப்பாக சேர்க்கப்படுவார்கள். ஆன்லைனில் படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன. 2 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர். கணக்கீட்டுப் படிவங்களில் தகவல்கள் சரியாக இருந்தால் எந்த படிவமும் நிராகரிக்கப்பட்டது. யாருடைய பெயரையும் காரணமின்றி நீக்க முடியாது. பட்டியலில் இருந்து நீக்கப்பட்டால் கண்டிப்பாக காரணம் தெரிவிக்கப்படும். எஸ்ஐஆர் பணிகளுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க வாய்ப்பில்லை ” என்றார்.
