எடப்பாடிக்கு ஆண்டவன் தண்டனை வழங்குகிறார்: டி.டி.வி.தினகரன் பேட்டி

கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து தற்போது எடப்பாடி பழனிசாமிசெய்த துரோகங்களுக்கு ஆண்டவன் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அமமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்ள டி.டி.வி.தினகரன் இன்று வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்ய டிச.31-ம் தேதி வரை நேரம் உள்ளது. அதற்குள் கூட்டணி குறித்து அறிவிக்க வேண்டும் என்று சட்டம் எதுவும் போட்டிருக்கிறீர்களா? கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளனர். உறுதியான பின்பு கூட்டணி குறித்து தெரிவிப்பேன்.

துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் அது எடப்பாடி பழனிசாமிக்கு தான் கொடுக்க வேண்டும் என செங்கோட்டையன் கூறியுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை அவர் செய்த துரோகங்களுக்கு ஆண்டவன் தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் மூலம் அவரது துரோகத்திற்கு இறுதி தீர்ப்பு எழுதப்படும்.

கடந்த 2017-ம் ஆண்டு திமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருந்து அவரை முதல்வராகிய 18 எம்எல்ஏக்கள் இவரால் ஜெயித்தவர்கள் அல்ல. இவருடைய அடையாளத்தால் அவர்கள் ஜெயிக்கவில்லை. ஆனால் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் போது தொகுதி மக்களிடம் கேட்டு தான் தகுதி நீக்கம் செய்தாரா?

அதிமுக என்ற கட்சியை இல்லாமல் செய்து இரட்டை இலை சின்னம் கையில் இருக்கிறது என்ற அகம்பாவம், ஆணவம், பதவி வெறியில் பேசிக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அதிமுகவை எடப்பாடி பழனிசாமி மிகவும் பலவீனப்படுத்தி ஒரு வட்டார கட்சியாகவும் குடும்ப கட்சியாகவும் மாற்றி வருகிறார். பாஜக கூட்டணியில் இருந்து எனக்கு எந்த அழைப்பு வரவில்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *