அவர், அன்புமணி ராமதாஸ் அல்ல; அன்புமணி மட்டுமே. அவரை பாமகவில் இருந்து நீக்கிவிட்டேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நிர்வாகக் குழு கூட்டம் இன்று (டிசம்பர் 17) நடைபெற்றது. இதன் பின் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அன்புமணி பாமகவின் தலைவர் அல்ல, அவருக்கு சின்னமும் ஒதுக்கப்படவில்லை என்று நாங்கள் தொடுத்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றமும், இந்திய தேர்தல் ஆணையமும் உறுதிப்படுத்தியுள்ளன. பாமகவில் இருந்து பல மாதங்களுக்கு முன்பே நீக்கப்பட்ட அன்புமணி, கட்சியின் சின்னத்தை, பெயரைப் பயன்படுத்தக் கூடாது. என் பெயரையும் அவரும், அவர் தரப்பினரும் பயன்படுத்தக் கூடாது. இதை சொல்லுகிறவன் இந்த கட்சியை உருவாக்கிய நான்.
ஆனால், அன்புமணியும் அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து அதிகளவில் ஆயிரக்கணக்கான பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். கட்சியைக் கைப்பற்ற பம்மாத்து வேலைகளை அன்புமணி தொடர்ந்து செய்து வருகிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
அவருக்கு பல்வேறு பதவிகளை கொடுத்து அழகு பார்த்தேன். தீட்டிய மரத்திலேயே கூர் பாய்ச்சியதைப்போல் பாமக என்னும் ஆலமரத்தின் கிளையை வெட்ட ஆரம்பித்திருக்கிறார். இதனுடைய பலன் கீழே விழுவதை தவிர எதுவும் இல்லை .தமிழ்நாடு முழுவதும் 96,000 கிராமங்களுக்குச் சென்று ஆலமரம் போல வளர்ந்த கட்சிதான் பாமக. எனக்கு கூட்டணி குறித்து பேச இந்த நிர்வாகக் குழு முழு உரிமையும் வழங்கியுள்ளது.
அவர், அன்புமணி ராமதாஸ் அல்ல; அன்புமணி மட்டுமே. அவரை பாமகவில் இருந்து நீக்கிவிட்டேன், இருப்பினும் அவர், வேட்புமனுக்களை வாங்கி வருகிறார். டெல்லி தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும் மீறி அன்புமணி செயல்பட்டு வருகிறார். அத்துடன் தவறான புள்ளி விவரங்களை கொடுத்து தேர்தல் ஆணையத்தையே ஏமாற்றி இருக்கிறார்கள். நிச்சயம் வெற்றிக் கூட்டணியை அமைப்பேன் ” என்றார்.
