உயர் கல்வி நிறுவன பாடத்திட்டங்களில் ஆர்எஸ்எஸ் தலையீடு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கல்வியாளர்களால் நடத்தப்பட வேண்டிய கல்வி நிறுவனங்கள் இப்போது அதிகாரத்துவ மற்றும் சித்தாந்தத் தலையீட்டை எதிர்கொள்கின்றன என்று ஆர்எஸ்எஸ் மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தனது சமூக தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சமீபத்தில் ‘மக்கள் நாடாளுமன்றத்தில்’ இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் (ஐஎஸ்ஐ) மாணவர்களைச் சந்தித்தேன். நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து எழுப்பி வரும் அதே தீவிரமான கவலைகளை அந்த மாணவர்களும் எழுப்பினர்.

ஐஎஸ்ஐ நிறுவனம் படிப்படியாக ஆர்எஸ்எஸ் மூலம் நிறுவன ரீதியாகக் கையகப்படுத்தப்பட்டு வருவதாக மாணவர்கள் தெரிவித்தனர். ஐஎஸ்ஐ என்பது ஏதோ ஒரு சாதாரண நிறுவனம் அல்ல. அது புள்ளியியல், கணிதம், பொருளாதாரம், தரவு அறிவியல், கணினி அறிவியல் மற்றும் கொள்கை உருவாக்கம் ஆகியவற்றில் உயர் மட்ட ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, நாட்டுக்கு உலகத் தரம் வாய்ந்த நிபுணர்களை உருவாக்கியுள்ளது. கல்வியாளர்களால் நடத்தப்பட வேண்டிய கல்வி நிறுவனங்கள் இப்போது அதிகாரத்துவ மற்றும் சித்தாந்தத் தலையீட்டை எதிர்கொள்கின்றன. பாடத்திட்டமும் ஆராய்ச்சியும் கூட ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.

இது கல்விச் சீர்திருத்தம் அல்ல, மாறாக இளைஞர்களின் எதிர்காலத்தை இருளில் தள்ளுவதற்காகவும், கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களை பலவீனப்படுத்துவதற்கான ஒரு சதித்திட்டம். இந்தத் தாக்குதல் நிறுவனங்கள் மீது மட்டுமல்ல, நாட்டின் அறிவுசார் சுதந்திரம், அறிவியல் மனப்பான்மை மற்றும் அதன் இளைஞர்களின் எதிர்காலத்தின் மீதும் தொடுக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கல்விக்கு சுதந்திரம் தேவை – நிறுவனங்கள் சித்தாந்தத்தால் அல்ல, அறிவு மற்றும் அறிவியலால் இயக்கப்படும்.” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *