முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து: 16 பேர் துடிதுடித்து பலி

இந்தோனேசியாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் தீயில் கருகி 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.

இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி மாகாண தலைநகர் மனாடோவில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான முதியோர் தங்கியிருந்தனர். இந்த நிலையில், திடீரென முதியோர் இல்லத்தின் ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ மளமளவென அடுத்த அறைகளுக்கும் பரவியது. இதனால் அங்கிருந்த முதியோர் தப்பியோட முடியாமல் தவித்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு நிறுவனத் தலைவர் ஜிம்மி ரோட்டின்சுலு தலைமையில் குழுவினர் 6 வாகனங்களில் விரைந்து சென்று தீயை அணைத்தனர். சுமார் 2 மணி நேரமாக போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 16 முதியோர் உடல் கருகி பலியானது தெரிய வந்தது.

மேலும் 15பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட தென்கிழக்கு ஆசிய தீவுக்கூட்டமான இந்தோனேசியாவில் தீ விபத்துகளில் இறப்பு தொடர்கதையாக உள்ளது. இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இந்த மாதம் ஏழு மாடி அலுவலகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *