வடகிழக்கை சேர்ந்த இளைஞர் உத்தாரகண்டில் அடித்துக் கொலை செய்யப்பட்டது வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட பயங்கர குற்றம் என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவைச் சேர்ந்த மாணவர் ஏஞ்சல் சக்மா உத்தாரகண்டில் இனவெறி தாக்குதலால் கொல்லப்பட்டது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மற்ற இந்திய மாநிலங்களில் உரிய பாதுகாப்போ குறைந்தபட்ச மரியாதையோ இல்லை என இனவெறி தாக்குதலுக்கு ஏஞ்சல் சக்மா பறிகொடுத்த அவரது சகோதரர் மைக்கேல் வேதனை தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே காவல்துறை மெத்தனமாகச் செயல்பட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த கொலைக்கு எதிராக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “இது வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட பயங்கரமான குற்றம். பாஜக தலைமையிலான அரசு இத்தகைய வெறுப்புணர்வைச் சாதாரணமான ஒன்றாக மாற்றி வருகிறது” என்று கூறியுள்ளார்.
