புது தேர்தல் வியூகத்தில் விஜய்
2026ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில், தவெக தலைவர் விஜய் தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மக்களிடம் பிரச்சாரம் செய்யாமல் அனைத்து இடங்களிலும் தன்னை மட்டுமே முன்னிறுத்தி பிரச்சாரம் செய்து வருகிறார். இது ஒரு புது யுக்தியாகவும்; அதேசமயத்தில், இது தவறான அரசியல் போக்கு என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட வாரியாக பிரச்சாரம்
சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக இல்லாமல், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக தலைவர் விஜய் தனது வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்துவருகின்றார். அந்த வகையில் விஜய், தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதி, கொளத்தூர், திருச்சி கிழக்கு, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில் எங்குமே அவர் தனது கட்சியின் வேட்பாளர்களை பிரச்சார வாகனத்தில் ஏற்றவில்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைவரும், தங்கள் கட்சியின் வேட்பாளர்களை பிரச்சார வாகனத்தில் ஏற்றியும், மேடை அமைத்து பிரச்சாரம் மேற்கொண்டால், மேடையில் வேட்பாளர்களை ஏற்றியும் பிரச்சாரம் மேற்கொள்வார்.
ஆனால், தவெக தலைவர் தான் பிரச்சாரம் மேற்கொள்ளும் எந்தவொரு இடத்திலும் தனது வேட்பாளர்களை அடையாளப்படுத்தாமல், தன்னையே முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார்.
