பெண் குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக இருப்பது செல்வமகள் சேமிப்புத் திட்டம். 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் பெற்றோரோ, பாதுகாவலரோ இந்த கணக்கைத் துவங்கலாம்; 15 ஆண்டுகள் வரை சேமிக்க முடியும். சிறுசேமிப்புத் திட்டங்களிலேயே இதற்குத் தான் அதிகபட்ச வட்டியாக, 8.20 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
பெண்ணுக்கு 10 வயது ஆன பின்தான் பல பெற்றோருக்கு, மகளது எதிர்காலத்துக்கு சேமிக்க வேண்டுமே என்று திடீர் ஞானோதயம் பிறக்கும். இவர்களுக்கு உதவும் விதமாகவும் சில வசதிகள் உள்ளன.
பல பொது, தனியார் துறை வங்கிகள், குழந்தைகளுக்கான சிறப்பு வைப்பு நிதி, ரெக்கரிங் டிபாசிட் திட்டங்களை வைத்துள்ளன. அதேபோல், பொது வருங்கால வைப்பு நிதியில் 15 ஆண்டுகள் முதலீடு செய்து வரலாம்; 7.10 சதவீத வட்டி கிடைக்கும்.
ரிஸ்க் எடுக்க துணிவுள்ளவர்கள், மியூச்சுவல் பண்டுகளில், சிறுவர்களுக்கான பண்டுத் திட்டங்களில் முதலீடு செய்யலாம். மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகளில், இவற்றில் பல பண்டுகள், 20 சதவீதத்துக்கு மேல் வருவாய் ஈட்டிக் கொடுத்துள்ளன.