இந்திய ஆணழகன் பட்டம் பெற்ற பிரபல நடிகர் வரீந்தர் சிங் குமான் மாரடைப்பால் காலமானார். இவருக்கு வயது 53.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸைச் சேர்ந்தவர் வரீந்தர் சிங் குமான். இவர் பிரபல நடிகர் மட்டுமின்றி சிறந்த உடற்பயிற்சி நிபுணர் ஆவார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு மிஸ்டர் இந்தியா ஆணழகன் பட்டம் பெற்றார். மிஸ்டர் ஆசியாவில் இரண்டாம் இடம் பிடித்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு பாடிபில்டிங் போட்டிக்காக வரீந்தர் சிங் குமான் ஸ்பெயின் சென்றார். அப்போது புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் அர்னால்டை சந்தித்தார். வரீந்தர் சிங் குமானின் உடலைப் பார்த்து அர்னால்ட் வியந்து பாராட்டி பேசினார். அர்னால்டின் அந்த பாராட்டு வரீந்தர் சிங்கிற்கு திரைவாசலை திறந்து வைத்தது.
கடந்த 2012-ம் ஆண்டு பஞ்சாபி மொழியில் கபடி ஒன்ஸ் அகைய்ன் என்ற படத்தில் நடிக்கத் தொடங்கிய இவர் 2014-ம் ஆண்டு இந்தி படங்களில் அறிமுகமானார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானோடு இணைந்து பதான் படத்தில் நடித்துள்ளார். இறுதியாக அவர் சல்மான்கான், கத்ரீனா கைப்புடன் இணைந்து நடித்த டைகர் 3 படம் 2023-ம் ஆண்டு வெளியானது.
வரீந்தர் சிங் சைவ உணவை சாப்பிட்டே உடற்பயிற்சிகளை செய்து வந்தார். அத்துடன் சைவ உணவால் ஏற்படும் நன்மைகள் குறித்து தொடர்ந்து பொதுமக்களிடம் பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது அவரது கையில் சிறு காயம் ஏற்பட்டது.
இதற்காக மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் அறுவை சிசிச்சை செய்து கொள்ள அமிர்தசரஸில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் திடீரென மாரடைப்பால் வரீந்தர் சிங் உயிரிழந்தார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
