வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது. இந்த அமைப்பு இன்று வடக்கு, வடமேற்கு திசையில், மியான்மர் – வங்கதேச கடற்கரையை நெருங்க வாய்ப்புள்ளது. இதனால் ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் வடமாவட்டங்களில் சில இடங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலுார், திருச்சி மாவட்டங்களில் சில இடங்கள் மற்றும் காரைக்காலில், இன்று(நவம்பர் 5) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், நாளை(நவம்பர் 6) கனமழைக்கு வாய்ப்புஉள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
