ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் பங்கேற்பேன்…வினேஷ் போகத் அறிவிப்பு!

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 2028-ம் ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதாக அறிவித்துள்ளார்.

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் 50 கி.பிரிவில் 100 கிராம் எடை கூடியதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று வெள்ளிப் பதக்கம் உறுதியான நிலையில் எடை அதிகரித்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

போட்டியில் இருந்து வெளியேற மன வேதனையில் மல்யுத்த விளையாட்டில் இருந்தே ஓய்வு பெற்ற வினேஷ் போகத், பின்னர் ராகுல் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில், ஹரியாணா சட்டமன்றத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டு வினேஷ் போகத் வெற்றி பெற்றார்.

கடந்த 2024-ம் ஆண்டு ஓய்வு பெறுவதாக அறிவித்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மீண்டும் விளையாட இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பாரிஸ் ஒலிம்பிக் தான் முடிவா என்று மக்கள் பலரும் என்னிடம் கேட்டு கொண்டே இருந்தனர். எனது பயணத்தை புரிந்து கொள்ள நான் நேரம் எடுத்து கொண்டேன். பாரிஸ் ஒலிம்பிக்கோடு எனது பயணம் முடியவில்லை.

நான் எவ்வளவு தூரம் விலகிச் சென்றாலும், என் மனதில் விளையாட்டுத் தீ அணையவில்லை. அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும் தலை குனியாத மன உறுதியுடன் 2028-ம் ஆண்டு நடைபெறும ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பேன். இந்த முறை நான் தனியாக செல்லப் போவதில்லை. எனது அணியில் எனது மகனும் சியர் லீடராக இணைந்துள்ளான்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *