கேரளா உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி: இடது முன்னணிக்கு பின்னடைவு!

கேரளா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யூடிஎஃப் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி, கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (டிசம்பர் 13) மொத்தமுள்ள 244 மையங்களிலும் எண்ணப்பட்டன.

இதில் 12 மணி நிலவரப்படி, காங்கிரஸ் தலைமையிலான யூடிஎஃப் அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மொத்த கிராம பஞ்சாயத்துகளில் காங்கிரசின் யூடிஎஃப் 445 இடங்களிலும், ஆளும் இடது முன்னணியான எல்டிஎஃப் 370 இடங்களிலும் முன்னிலை வகித்தன. மேலும், நகராட்சிகளிலும் யூடிஎஃப் 55 இடங்களைப் பிடித்து முன்னிலை வகிக்கிறது. 87 நகராட்சிகளில் யூடிஎஃப் 55 இடங்களிலும் எல்டிஎஃப் 28 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. கோழிக்கோட்டில் இடது முன்னணியான எல்டிஎஃப் முன்னிலை வகிக்கிறது.

இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 45 வார்டுகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 6 இடங்களில் வெற்றி பெற்றால், மேயர் பதவியைப் பிடிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கேரள உள்ளாட்சி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் நிலையில் ஆளும் இடது முன்னணி பின்னடைவை சந்தித்துள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *