தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தொடர்பான படிவங்களை சமர்ப்பிக்க நாளை (டிசம்பர் 14) கடைசி நாளாகும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களிலும், புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் நவம்பர் 4-ம் தேதி தொடங்கின. இந்த பணியின்போது வீடுவீடாக சென்று கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வழங்கினர். அந்த படிவங்களை பூர்த்தி செய்ததும் அவற்றை வாங்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர்.
இந்தப்பணிகள் கடந்த 4-ம் தேதி முடிவடைவதாக தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்தது. பின்னர் டிசம்பர் 11-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்திருந்தது. எஸ்ஐஆர் பணிகள் நடைபெறும் மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் கேட்டுக்கொண்டபடி, இந்த பணிகளுக்கான கால அளவை தேர்தல் ஆணையம் மேலும் நீட்டித்தது.
அதன்படி தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை வழங்கி பதிவேற்றம் செய்யும் பணிக்கான கால அளவை டிசம்பர் 14-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பான எஸ்ஐஆர் படிவங்களை சமர்ப்பிக்க நாளை கடைசி நாளாகும். இதன் பின் டிசம்பர் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.
