மகாத்மா காந்தி பெயர் மாற்றம்: டெல்லியில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பேரணி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான பெயர் மாற்றிய மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி நடத்தினர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிமுகப்படுத்தினார். காந்தியின் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொடர் அமளி ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டெல்லி நாடாளுமன்ற வளாகம் முன்பு எதிர்க்கட்சி எம்பி.,க்கள் இன்று (டிசம்பர் 18) பேரணி நடத்தினர். மகாத்மா காந்திக்கு செய்யும் அவமரியாதையை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்ற வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகளை ஏந்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணி சென்றனர். இதன்பின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பங்கேற்றனர். அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ” மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்குப் பெயர் மாற்றுவது மூலம் எங்களால் வழங்கப்பட்ட அந்த உரிமையை பாஜகவினர் பறிக்கிறார்கள். அவர்கள் மக்களின் உரிமைகளைப் பறிக்கிறார்கள். இது ஒரு பெரிய பிரச்னை, இது ஏழைகளுக்கு மிகவும் கடினமானது. எனவே, நாங்கள் இதற்காக இறுதிவரை போராடுவோம். நாங்கள் வீதிகளில் போராடுவோம். ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு போராட்டம் நடைபெறும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *