அதிக எடை கொண்ட செயற்கைக் கோளுடன் பாகுபாலி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மற்றும் எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்களை பொருத்தி விண்ணில் ஏவி வருகிறது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 8.55 மணிக்கு பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 மூலம் விண்ணில் பாய்ந்தது.
இதில் அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 6.5 டன் எடை கொண்ட புளுபேர்ட்-6 என்ற செல்போன் சேவைக்கான செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. ராக்கெட்டின் இறுதிக்கட்ட பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 8.54 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை விண்ணில் பாய்ந்தது. அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை முதன் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
