திருச்செந்தூர் அருகே, 2நாட்கள் மட்டும் மனைவியாக வாழ்ந்து விட்டு, பணம், நகையுடன் தப்பியோடிய இளம்பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ராமசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். 35 வயதாகும் இவர், பழ வியாபாரம் செய்து வருகிறார். பாஸ்கர் சாத்தான்குளத்தை சேர்ந்த திருமண புரோக்கர் மூலம் தஞ்சாவூரை சேர்ந்த ஆதரவற்ற இளம்பெண் என்று கூறிய பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.
பாஸ்கர், அப்பெண்ணை கடந்த 20ஆம் தேதி திருச்செந்தூர் துர்க்கை அம்மன் கோவில் முன்பு 4 கிராம் தங்கதாலியை கட்டி திருமணம் செய்து கொண்டார்.
பணம், நகையுடன் தப்பியோட்டம்
இதையடுத்து, கடந்த 22ஆம் தேதி பாஸ்கர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் புதிதாக வாங்கிய துணிகளையும் காணவில்லை. அப்போதுதான் மனைவி கட்டிய 4 கிராம் தங்க தாலி, வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் துணிகளுடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து பாஸ்கர் திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
