காவல்துறை வாகனம் மீது வெடிகுண்டு வீசிய சம்பவம் : பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம்

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை அருகே குற்றவாளிகளை காவல் போலீசாரின் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

நயினார் கண்டனம்

அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதற்கு இந்த ஒற்றைச் சம்பவமே சாட்சி!” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “துருப்பிடித்த இரும்புக்கரத்தைக் கொண்டு மக்கள் பாதுகாப்பை செதில் செதிலாகச் சிதைத்தது மட்டுமல்லாது, தற்போது சீருடை அணிந்த காவலர்கள் பாதுகாப்பையும் சூறையாடி, தமிழகத்தைப் பேரழிவில் நிறுத்தியுள்ள கேடுகெட்ட ஆட்சி தான் நாடு போற்றும் நல்லாட்சியா முதல்வர் ஸ்டாலின் அவர்களே?” என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அன்புமணி கண்டனம்

அதேபோல, பாமக தலைவர் அன்புமணி, எக்ஸ் தளத்தில்,
“தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் கூறிய சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையால் இன்னும் கைது செய்ய முடியவில்லை. செயல்படாத திமுக அரசு இனியும் நீடிக்கக் கூடாது.

அதை வரும் தேர்தலில் தமிழக மக்கள் செய்து முடிப்பார்கள்
சமூக வலைதளத்தில் மட்டும் களமாடி, மக்கள் பாதுகாப்பைக் களவாடும் ஆட்சியை இனியும் மக்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! திறனற்ற நிர்வாகத்தால் தமிழகத்தை வன்முறைக் களமாகவும் ரவுடிகளின் கூடாரமாகவும் மாற்றிய திமுக ஆட்சி தமிழக மக்களால் அழித்தொழிக்கப்படும் நாள் தொலைவில் இல்லை!” என்று பதிவிட்டுள்ளார்.

டிடிவி தினகரன் கண்டனம்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காவல்துறையினரின் வாகனம் மீது வெடிகுண்டு வீசி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் கொலை, கொள்ளைகளில் தொடங்கி பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் தாரளப்புழக்கம், கள்ளத்துப்பாக்கி பயன்பாடு வரிசையில் தற்போது நாட்டு வெடிகுண்டு கலாச்சாரமும் இணைந்திருப்பதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக்கப்பட்டு, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண்டிய காவல்துறைக்கே பாதுகாப்பு வழங்கவேண்டிய சுழல் ஏற்பட்டுள்ளது” என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *