திருவாரூர் பள்ளி மாணவிக்கு டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பதக்கம் ரொக்க பரிசு வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகமும், மத்திய கல்வித் துறையும் இணைந்து தேச பக்தியை வளர்க்கும் நோக்கில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியம் மற்றும் கட்டுரைப்போட்டியை இணையதளம் வாயிலாக நடத்தியது.
இப்போட்டிகளில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில், தமிழ்நாட்டில், திருவாரூரில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வைகயோஷனா கட்டுரைப்போட்டியில் கலந்து கொண்டார்.
இவர் சுதந்திரப்போராட்ட காலத்தில் சுபாஷ் சந்திரபோஸின் ராணுவப் படையில் சேர்ந்து பணியாற்றிய நீரா ஆர்யா என்ற பெண்மணி குறித்து கட்டுரை எழுதினார்.
அந்த கட்டுரையில் நீரா ஆர்யா சுதந்திரப்போராட்ட காலத்தில் எதிர்கொண்ட எதிர்ப்புகள், கணவரே அவரை ஆங்கிலேயர்களிடம் காட்டிக்கொடுக்க முற்பட்டது, நாட்டிற்காக, நாட்டின் விடுதலைக்காக அவர் எதிர்கொண்ட போராட்டங்கள் தியாகங்கள் குறித்து அம்மாணவி தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.
குடியரசு விழாவில் தமிழக மாணவி
அவரது இந்த கட்டுரை சிறந்த கட்டுரையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கட்டுரை போட்டியில் வென்ற மாணவி வைகயோஷனாவுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வரும் 26ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளது.
பொன்னாடை அணிவித்து பாராட்டு
அந்த விழாவில் மாணவி வைகயோஷனாவுக்கு பதக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, மாணவி மாணவி வைகயோஷனாவை பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர், ஆசரிரியர்கள் பாராட்டி, பள்ளி சார்பில் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
டெல்லி குடியரசு தினவிழாவில் தமிழகத்தில் இருந்து மொத்தம் 5 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
