“அம்மா‌ தன் காதலை டான்ஸ் ஆடி வெளிப்படுத்தினாங்க” – விமர்சனங்களுக்கு இந்திரஜா விளக்கம்

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி பிரியங்கா நடனம் ஆடினார். இதுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதுபற்றி ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா செய்தியாளர்கள் முன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்ற மாதம் நடிகர் ரோபோ சங்கர் (46) உடல்நலக் குறைவால் காலமானார். இவரின் மறைவு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சினிமா துறையில் தற்போது வளர்ந்து வரும் சமயத்தின் போது ரோபோ சங்கர் மறைந்து விட்டது, குறித்து திரைப் பிரபலங்கள் பலரும் வருத்தம் தெரிவித்தனர்.

சர்ச்சையான மனைவி நடனம்

இதனிடையே ரோபோ ஷங்கரின் இறுதி ஊர்வலத்தின் போது, அவரது மனைவி பிரியங்கா நடனமாடியது சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்திருக்கிறார்.

மகள் அளித்த விளக்கம்:-

அவர் பேசியதாவது, “எந்த இடத்தில் நகைச்சுவை மற்றும் சிரிப்பு இருக்கிறதோ அங்கு அப்பா நிச்சயம் இருப்பார். அவர்விட்டு சென்ற பொறுப்புகளும், கடமைகளும் எனக்கு நிறைய இருக்கிறது. அவர் விட்டு சென்ற பாதையில் இருந்து நாங்கள் தொடருவோம். மக்களின் ஆதரவுதான் எங்களுக்கு முக்கியம்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், “அப்பா சாமிகிட்ட போகும்போது, அம்மா‌ தன்னோட காதலை நடனத்தின் மூலமாக வெளிப்படுத்தினார்கள். எங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி, துக்கம் எல்லாவற்றையும் டான்ஸ் மூலம் தான் வெளிப்படுத்துவோம்.

அதுதான் அவர்களின் காதல், அதுதான் எங்கள் வாழ்க்கை. அதை தவறாக புரிந்து கொள்வோரின்‌ புரிதல் அவ்வளவுதான்..” என்று மிகவும் அனுபவமிக்க பெண்ணாக பேசி விளக்கமளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *