ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் உயிரிழந்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி ஒரு கும்பலால் சென்னையில் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூரக் கொலை தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து 27 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் முதல் குற்றவாளியாக(ஏ 1) ரவுடி நாகேந்திரன் கைது செய்யப்பட்டார். இவர் மீது கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன.
இந்த வழக்கை மாவட்ட முதன்மை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து வருகிறார். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பு காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம்
அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
