சர்ச்சைக்கு பெயர் போன அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கட்சியில் தனக்கும் மன வருத்தம் உள்ளதாக பேசி இருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் கட்டப்படவுள்ள புதிய அங்கன்வாடி மையத்திற்கான பூமி பூஜையில் செல்லூர் கே.ராஜு கலந்து கொண்டார்.

திமுக தான் எதிரி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எங்களைப் பொறுத்தவரை திமுக தான் எதிரி. மக்கள் விரோத ஆட்சியாக இருக்கக்கூடிய திமுகவை வீட்டுக்கு அனுப்புவது தான் எங்களது எண்ணம்” என்று தெரிவித்தார்.
செங்கோட்டையன் பற்றி..?
செங்கோட்டையன் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த செல்லூர் கே.ராஜூ, “ஒரு மன வருத்தம் என்றால் அதை பொதுவெளியில் சொல்லக்கூடாது என்றும் அதனால் தான் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை நீக்கி இருக்கிறார் என்று விளக்கமளித்தார்.

எனக்கும் மனவருத்தம்
மேலும், “தலைமை சொல்வதற்கு யாராக இருந்தாலும் கட்டுப்பட்டு தான் நடக்க வேண்டும் எனக்கும் கூடத்தான் மன வருத்தம் இருக்கு என்பதை குறிப்பிட்டு சொன்ன செல்லூர் ராஜூ, யாருக்கு மன வருத்தம் இருந்தாலும் அதை பொதுச் செயலாளரை பார்த்து தான் சொல்ல வேண்டும், அதை விடுத்துவிட்டு ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கக் கூடாது என்றார்.
பொதுச்செயலாளர் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு நாங்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்கத்தான் செய்கிறோம் என்று செல்லூர் ராஜூ கூறினார்.
