சத்தீஸ்கரில் நேற்று 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இன்று 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சலைட்டுளை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிர இறங்கியுள்ளது. இதையடுத்து நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணி இந்தியா முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர், தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள கங்கலுார் வனப்பகுதியில், நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறப்பு அதிரடிப்படையினர், பிஜப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்ட ரிசர்வ் போலீஸார், மத்திய ரிசர்வ் போலீஸாரின் கோப்ரா பிரிவினருடன் இணைந்து அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு சிறப்பு அதிரடி படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர்.
இதில் 6 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்று நடந்த நடந்த துப்பாக்கிச் சண்டையில், 12 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த ஆண்டில் 281 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
