அயோத்தி மாதிரி தமிழ்நாடு வருவதில் தவறில்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி

அயோத்தி இங்கிலாந்திலோ அல்லது ஐரோப்பாவிலோ இல்லை. அயோத்தி மாதிரி தமிழ்நாடு வருவதில்  தவறில்லை என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

சென்னையில் அவர் இன்று (டிசம்பர் 6) செய்தியாளர்களிடம் கூறுகையில், ” இந்தியாவில் தான் அயோத்தி இருக்கிறது. அது இங்கிலாந்திலோ அல்லது ஐரோப்பாவிலோ இல்லையே? அயோத்தி மாதிரி தமிழ்நாடு வருவதில் தவறில்லை. நாம் எல்லாம் ராமருடைய ஆட்சியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அயோத்தி மாதிரி இருந்தாலும் சரி எப்படியானாலும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி, ராமருடைய ஆட்சி போல் வர வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் தர்ஹா அருகே உள்ள தூணில்தான் தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக, தர்ஹா சம்பந்தப்பட்டவர்களும், இஸ்லாமியர்களும் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், முதலமைச்சர் சொன்னதைக் கேட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் பேசுவதை அவர்கள் விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் மதக்கலவரம் வர எந்தவிதமான முகாந்தரமும் இல்லை.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை அழித்து விடுவோம் என்று கூறி வருகிறார். அவருடைய கனவு பலிக்காது. அவருடைய காலம் எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் சரி, எத்தனை யுகங்கள் ஆனாலும் சரி, சனாதன தர்மத்தை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது” என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *