திருப்பரங்குன்றத்தில் டிச.12-ம் தேதிக்குள் தீபம் ஏற்ற வேண்டும்: ஹெச்.ராஜா வலியுறுத்தல்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் டிசம்பர் 12-ம் தேதிக்குள் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா இன்று (டிசம்பர் 8) கலந்து கொண்டார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற முடியும் என மதுரை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேரடியாக சென்று பார்வையிட்டு வந்துள்ளார். இந்த அரசு இந்து விரோத அரசாக செயல்பட்டு வருகிறது. முருகனுக்கு சொந்தமான இடத்தில் தீபத்தை ஏற்றுவதை எப்படி தடுக்க முடியும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கையில் இருந்து மதுரை நோக்கி நான் வந்து கொண்டிருந்தேன். அப்போது டிஎஸ்பி செல்வராஜ் என்பவர் வாகன விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்துக்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? 2026-ல் வரும் சட்டமன்றத் தேர்தலில் முக்கிய சாராம்சமாக திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சினை தான் இருக்கும். இதன் மூலம் திமுக அரசை தூக்கி அடிப்போம். தமிழகத்தில் திமுகஅரசை துடைத்தெறிய வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் டிசம்பர் 12-ம் தேதிக்குள் தீபம் ஏற்றப்பட வேண்டும், அதிமுக, பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைவராக உள்ளார். தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் நிகழும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *