கிறிஸ்துமஸ் அன்று மழை பெய்யும்…மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று (டிச.25) தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் டிச. 24, 25 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் டிச. 26-ம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், மத்தியமேற்கு- தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு இன்று முதல் டிச.24-ம் தேதி வரை செல்ல வேண்டாம்” என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *