தமிழகம் என்றைக்குமே டெல்லிக்கு ‘அவுட் ஆப் கன்ட்ரோல்’ தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதன் ஒருபகுதியாக “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற பிரச்சாரத்தை திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, முதல் கட்டமாக 68 ஆயிரத்து 463 வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு உதவிட திமுக வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இரண்டாம் கட்ட பரப்புரையை சென்னை ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 10) தொடங்கி வைத்தார். அதன்படி, வரும் ஜனவரி 10-ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு தமிழ்நாடு முழுவதும் கலந்துரையாடல்கள், தெருமுனைக் கூட்டங்கள், வாக்காளர் சரிபார்ப்பு இயக்கங்களை திமுக நடத்த உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், ” எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகத்துக்கு வர நினைத்தால், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும். தமிழகம் என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு ‘அவுட் ஆப் கன்ட்ரோல்’ தான் “என்று கூறியுள்ளார்.
