வாரத்தின் தொடக்க நாளே அதிரடி உயர்வு…1 லட்ச ரூபாயை நெருங்கிய தங்கம் விலை!

வாரத்தின் தொடக்க நாளான இன்று (டிசம்பர் 15) தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் 99,680 ரூபாய்க்கு விற்பனையாகிறது

தங்கம் விலை மீண்டும் கட்டுக்கடங்காத வகையில் உயர்ந்து வருகிறது. இந்த அதிரடி விலை உயர்வுக்கு, அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்ததுதான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. பொதுவாக வட்டி விகிதம் குறைப்பதால், முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்கள், சேமிப்புகளில் முதலீடு செய்வதை குறைத்து, தங்கத்தின் மீது தங்கள் கவனத்தை அதிகம் திருப்புவார்கள். அப்படியாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால் அதன் விலை உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஒரு சவரன் தங்கம் 97,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது அப்போது புதிய உச்சமாக இருந்தது. இதன் பின் தஙகம் விலை ஏற்றம், இறக்கமாக இருந்தது. திடீரென விலை இடையில் குறைந்தது. இதனால் ஒரு சவரன் 89,440 ரூபாய்க்கு நவம்பர் 5-ம் தேதி விற்பனையானது. இதனால் தங்கம் விலை குறைந்து விடும் என கருதப்பட்டது.

ஆனால் டிசம்பர் மாதம் பழையபடி தங்கம் விலை உயர ஆரம்பித்தது. இம்மாத தொடக்கத்தில் 96 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது. கடந்த 12-ம் தேதி தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. இதனால் ஒரு கிராம் 12,370 ரூபாய்க்கும், ஒரு சவரன் 98,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று (டிசம்பர் 15) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் 99,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் 12,460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. இதன்படி இன்று வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாயும், கிலோவுக்கு 3 ஆயிரம் ரூபாயும் உயர்ந்து ஒரு கிராம் 213 ரூபாய்க்கும், ஒரு கிலோ .2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம், வெள்ளி விலை உயர்வால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *