திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்ஹாவில் கந்தூரி விழாவின் போது ஆடு, கோழி பலியிட தடைகோரி தொடரப்பட்ட வழக்கில் தர்ஹா நிர்வாகம் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்ஹா உள்ளது. இதில் சந்தனக்கூடு விழா டிசம்பர் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 6-ம் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு கந்தூரி விழாவின் போது ஆடு கோழி பலியிட எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்த நிலையில் திருப்பரங்குன்றம் மலை பகுதியில் ஆடு கோழி பலியிட தடை விதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு சிக்கந்தர் தர்ஹாவில் கந்தூரி விழாவின் போது ஆடு, கோழி பலியிட தடை விதிக்கக் கோரி சோலையழகு புரத்தைச் சேர்ந்த மாணிக்க மூர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், திருப்பரங்குன்றம் மலை மீது உயிர் பலியிடவோ, அசைவ உணவு பரிமாறவோ கூடாது என ஏற்கெனவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டு கந்தூரி விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார்.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, கந்தூரி விழாவுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தர்ஹா நிர்வாகத்தின் மேலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை ஜனவரி 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். மேலும் அதுவரை தற்போதைய நிலையே தொடர உத்தரவிடக்கோரிய மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.
