சென்னை நந்தனத்தில், இரவு சித்தப்பா வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பள்ளி மாணவியை வழிமறிந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை தியாகராய நகர் சவுத் போக் சாலையை சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பள்ளி மாணவி. சென்னை நந்தனத்தில் உள்ள தனது சித்தப்பா வீட்டுக்கு சென்ற, இந்த சிறுமி விளையாடிவிட்டு தனது வீட்டுக்கு புறப்பட்டார்.
பாலியல் தொல்லை
அப்போது நந்தனத்தைச் சேர்ந்த 25 வயதாகும் ஆட்டோ ஓட்டுநர் நீலகண்டன் என்பவர் வலுக்கட்டாயமாக சிறுமியின் கையைப் பிடித்து தனது வீட்டுக்குள் இழுத்துச் சென்று காதலிப்பதாக கூறியதுடன், 12ஆம் வகுப்பு முடித்தவுடன் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக தெரிகிறது.
பயத்தில் அழுத சிறுமி
ஆட்டோ டிரைவரின் பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட அச்சிறுமி அழவே, “நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் உனக்குத்தான் அசிங்கம்..” எனச் சொல்லி சிறுமியை மிரட்டி, வெளியே அனுப்பியுள்ளார்.
தலைமறைவான ஆட்டோ ஓட்டுநர்
நடந்த சம்பவம் தொடர்பாக சிறுமி தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் தேனாம்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஆட்டோ ஓட்டுநர் நீலகண்டனை தேடி வருகின்றனர்.
